பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐசியூ.,வில் அனுமதி

லண்டன்: கெரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை நேற்று இரவு மோசமடைந்ததால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

55 வயதாகும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்ததால், அவரை கவனித்து வந்த லண்டன், செயின்ட் தாமஸ் மருத்துவமனை டாக்டர்கள், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அப்போதே அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவியது.


தற்போது அவர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆனாலும் செயற்கை சுவாசம் அவருக்கு பொருத்தப்படவில்லை. தானாகவே சுவாசிக்கிறார். கொரோனா தொற்றின் காரணமாக அதிக காய்ச்சல் மற்றும் சளி தொடர்ந்து இருக்கிறது.

மேலும், வெளியுறவுத் துறை செயலாளர், டொமினிக் ராப்பை, தேவைப்படும் போது நிர்வாகத்தை கவனிக்குமாறு போரீஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார். அந்நாட்டு தேசிய சுகாதார துறையினர், சிறப்பான சிகிச்சை அளிப்பதாகவும், மருத்துவர்களுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.

இச்செய்தி குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், 'அவர் குணமடைய அனைவரும் வேண்டிக்கொள்கிறோம். எனக்கும், நமது நாட்டிற்கும் அவர் நல்ல நண்பர். உறுதியான அவர், போராடுவார்.' என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சவாளியினரும், பிரிட்டன் நிதியமைச்சருமான ரிஷி சுனக் கூறுகையில், 'அவர், சிறந்த சிகிச்சையை பெறுவார் என்று எனக்குத் தெரியும், இது இன்னும் அவரை வலுவானதாக ஆக்கும்' என்றார்.

போரீஸ் ஜான்சனின் துணைவியாரும் கர்ப்பிணியுமான, கேரி சைமண்ட்ஸூம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் அதிலிருந்து குணமடைந்து வருகிறார்.

பிரிட்டனில் மூன்றாவது வாரமாக ஊரடங்கு தொடரும் நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 51,608 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,373 ஆக உள்ளது.